156 பயனாளிகளுக்கு ரூ. 94.90 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, August 25, 2021

156 பயனாளிகளுக்கு ரூ. 94.90 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

தருமபுரி, வள்ளல் அதியமான் கோட்டத்தில் இன்று நடைபெற்ற விழாவில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 3228 பயனாளிகளுக்கு ரூ.30.82 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமாக இன்றைய தினம் 156 பயனாளிகளுக்கு ரூ. 94.90 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி வள்ளல் அதியமான் கோட்டத்தில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (25.08.2021) நடைபெற்றது. இவ்விழாவிற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.என். வி.எஸ்.செந்தில்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்று அறிவித்து அதனை நிறைவேற்றிடும் விதமாக, "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை செயல்படுத்த உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையினை உருவாக்கி அத்துறையின் மூலம் அம்மனுக்கள் தீர்வுகாண ஆணையிட்டார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 7,708 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 4295 மனுக்களுக்குத் தீர்வு மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் தொடர்புடைய அலுவலர்கள் மூலம் நேரடி தணிக்கை மற்றும் விசாரணை செய்து தகுதியின் அடிப்படையில் 100 நாட்களில் தீர்வு காணும் வகையில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு நலத்திட்டங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டது.

வீட்டுமனை பட்டா , முதியோர் உதவித்தொகை , மின்னணு குடும்ப அட்டை, இலவச வீடு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குக்கிராம பகுதியில் புதிய குடிநீர் இணைப்புகள் மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறையின் சார்பில் தார்சாலை, சிமெண்ட் சாலை அமைத்தல், புதிய வழித்தடத்தில் பேருந்து வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மனுவின் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் தகவல்கள்

எதுவும் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட மனுதாரரிடம் பெற்று தீர்வு காணப்பட்டது. தகுதியுடைய அனைவரும் பயன் பெறுகின்ற வகையில் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து விரைவாக தீர்வு காண அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் உத்தரவிட்டார்கள். தருமபுரி மாவட்டத்தில் 4,45,700 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000 வீதம் ரூ.178.28 கோடி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண உதவியாக 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 4,45,559 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் 17 பயனாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று காலங்களில் ஒவ்வொரு நபருக்கும் 15 கிலோகிராம் அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக ரூ.4,000 வீதம் என 313 நபர்களுக்கு ரூ.12.52 இலட்சம், 10 கிலோ அரிசி மற்றும் 15 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட முன்களப் பணியாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில், ஊக்கத்தொகையினை வழங்கிட உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில், 216 மருத்துவர்களுக்கு தலா ரூ.30,000/- வீதம் ரூ.64,80,000 ஊக்கத் தொகையும், 341 செவிலியர்களுக்கு ரூ.20,000/- வீதம் ரூ.68,20,000 ஊக்கத் தொகையும், 594 இதரப் பணியாளர்களுக்கு தலா ரூ.15,000/- வீதம் ரூ.89, 10,000 ஊக்கத் தொகையும், 67 பட்டமேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு தலா ரூ.20,000/- வீதம் ரூ.13,40,000 ஊக்கத் தொகையும், காவல்துறையைச் சார்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1371 காவல், ஆளிநர்களுக்கு ரூ.5,000/- வீதம் ரூ.68,55,000 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் மகளிர் 17,38,201 முறையும், மாற்றுத்திறனாளிகள் 15,649 முறையும், மாற்றுத்திறனாளி உதவியாளர்கள் 512 முறையும், திருநங்கைகள் 936 முறையும் இலவசமாக பயணித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கையாக இதுவரை 5,49,662 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 18-44 வயதிற்குட்பட்டவர்களில் 2,58,339 நபர்களுக்கும், 45-60 வயதிற்குட்பட்டவர்களில் 1,71,983 நபர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 57,987 நபர்களுக்கும், 10,401 கர்பிணி தாய்மார்களுக்கும், 8,441 பிரசவித்த தாய்மார்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 3228 பயனாளிகளுக்கு ரூ.30,81,69,075 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமாக இன்றைய தினம் நடைபெற்ற இவ்விழாவில் 156 பயனாளிகளுக்கு ரூ. 94,89,500 மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா, புதிய மின்னணு குடும்ப அட்டைகள், பசுமை வீடு கட்டுவதற்கான மானிய நிதியுதவி உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய பயனாளிகளுக்கு துறை அலுவலர்கள் மூலம் வழங்கப்படும்.

நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் திருமதி. சித்ரா விஜயன் இ.ஆ.ப., அரூர் கோட்டாட்சியர் திரு.முத்தையன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) திருமதி .வி.கே.சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. ஜெயக்குமார், நல்லம்பள்ளி ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி. மகேஸ்வரி பெரியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தடங்கம்.சுப்பிரமணியம், வட்டாட்சியர்கள் திரு. திரு.அசோக்குமார் (பாலக்கோடு), திரு.பி.செந்தில் (நல்லம்பள்ளி), திருமதி.பார்வதி (பாப்பிரெட்டிப்பட்டி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு அருள்மொழிதேவன், திரு.மகாலிங்கம் (தருமபுரி), திருமதி.ஷகிலா, திரு.மணிவண்ணன் (நல்லம்பள்ளி) ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment