குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 23, 2021

குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.08.2021) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய வட்டாரங்களில் ஒலிபெருக்கியிலும், துண்டு பிரசுரங்களின் மூலமும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் திருமணத்தில் ஈடுபடுவோர்கள் மீது இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு வருடம் அபராதம் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

குழந்தைத் திருமணம் என்பது பெண்ணைப் பொறுத்தமட்டில் 18 வயதும், ஆண்களைப் பொறுத்தமட்டில் 21 வயதும் நிறைவடையாத நிலையில் செய்யப்படும் திருமணம் ஆகும். சமூகத்திலும், குடும்பத்திலும் பெண்ணிற்கு உரிய இடம் அளிக்காதது. இன்றளவும் நீடிக்கும் வரதட்சணைக் கொடுமை. குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் உடல், மனம், உணர்வு ரீதியான பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாது இருத்தல். கல்வி அறிவு மற்றும் பொது அறிவு தேவையான அளவு இல்லாமை. வறுமை தற்போதைய நவீன மயத்தின் காரணமாக வளர் இளம் பருவத்தில் இருக்கக்கூடிய ஆண், பெண் குழந்தைகளிடையே ஏற்படக்கூடிய இனக் கவர்ச்சி போன்ற பாலியல் ரீதியான விஷயங்கள் குறித்த தெளிவான புரிதல் இல்லாதது. சமூகத்தில் பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டுமே என்று சுமையாகக் கருதுவது. வறுமையின் நிமித்தம் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்தும் நிலை. சமூகத்தில் பெண்களுக்கு ஆண்களினால் வரும் பாலியல் தொல்லையிலிருந்து திருமணமே பாதுகாப்பு என்ற போலியான நம்பிக்கை பாலினம் சதவீதத்தில் சமமில்லா நிலை போன்றவை குழந்தை திருமணத்திற்கான காரணங்கள் ஆகும்.

குழந்தைத் திருமணத்தால் திருமணம் ஆனவுடன் கருவுறுதல் நிலை ஏற்படும் ஆனால் இளம் வயது என்பதால் கர்பப்பை முழுவளர்ச்சி அடையாததன் காரணமாக அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கருவுருதல், கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பு ஆகியன அடிக்கடி ஏற்படுவதால் சத்துக் குறைபாடு அதிகபட்சம் ஏற்படுகிறது. அப்படியே கருச்சிதைவு ஏற்படாமல் பிரசவித்தாலும் தாய், சேய் மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படியே மரணம் ஏற்படாத நிலையில், குழந்தைகள் எடைக்குறைவாகவும், உடல், மன குறைபாடு உள்ள குழந்தையாகவும் பிறக்க வாய்ப்பு உண்டு. மேலும், தாய்க்கு இரத்த சோகை ஏற்படும், அதுமட்டுமல்லாமல் உடல் மற்றும் மனம் பாதிப்பு அடைவதால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனால் சரியாக வேலை செய்ய இயலாத நிலையினால் வறுமைக்கு அடிகோலும். இதனால் குடும்பத்தில், வேலைக்கு செல்ல இயலாததாகையால்) இதனால் பெண்கள் மீது பல்வேறு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக படிக்கும் பருவத்தில் திருமணம் செய்வதால் கல்வி அறிவு தடைப்பட்டு தன்னம்பிக்கை குறைந்து அதனால் தன்னுடைய சொந்தக் குழந்தைகளையும் சரியாக படிக்க வைக்க முடியாமல் அவருடைய சாதாரண சந்தோஷத்தைக்கூட தீர்க்க முடியாத நிலையில் ஏற்படும். இதன் காரணமாக குடும்பத்தையும் சரிவர பராமரிக்க இயலாத நிலை ஏற்படும். சரிவர கணக்குகள் பராமரிக்க இயலாததனால் பணத்தை கையாளுவதில் சிரமம் ஏற்பட்டு நாளடைவில் கடன்கள் பெருகி அதனால் தங்ளுடைய குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை ஏற்படும். மேலும் பொது அறிவு இல்லாத காரணத்தால், பாலியல் ரீதியான பிரச்சனைகள், கணவன் மனைவியினிடையே ஏற்பட்டு குடும்பம் சிதையும் வாய்ப்பு உண்டு.

இதன் தொடர்ச்சியாக தற்கொலை மற்றும் கொலைகள் நிகழ்வதால் இளம் வயதிலேயே விதவைகளாகவும், குடும்பத்தினரால் புறந்தள்ளப்பட்டவர்களாகவும் ஆகும் நிலை ஏற்படும். இதன் காரணமாக எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக குழந்தைகள் ஆதரவற்று மிகவும் துன்புறும் சூழ்நிலையில் வாழக்கூடிய நபர்களாக ஆகும் வாய்ப்பு மிகவும் அதிகம் உள்ளிட்ட பல்வேறு பின் விளைவுகள் ஏற்படுகிறது. 

குழந்தைத்திருமணத்தை பற்றி மாவட்ட ஆட்சியர்/மாவட்ட நீதிபதி, குழந்தைத்திருமணத்தடுப்பு அலுவலர் (மாவட்ட சமூகநல அலுவலர்), மாவட்ட குழந்தைகள் துகாப்பு அலுவலர், காவல் துறை (குழந்தைகள் நல அலுவலர், சிறப்பு சிறார் காவல் அலகு), குழந்தைகள் நலக்குழு(தலைவர், உறுப்பினர்கள்), கிராம நிர்வாக அதிகாரி, பஞ்சாயத்து தலைவர், முதல் வகுப்பு நீதிபதி (அல்லது) பெருநகர் நீதிபதி பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர்களிடமும், ஒன்றிய கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு , சைல்டு லைன் (1098) (குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி சேவை) மூலமும் தகவல் தெரிவிக்கலாம். 

குழந்தைத் திருமணம் தடுப்பு சட்டம் 2006ன் கீழ் தமிழ்நாடு அரசு குழந்தைத்திருமண தடுப்பு விதிகள் 30-ம் தேதி டிசம்பர் 2009 அன்று வெளியிட்டுள்ளது. (அ.ஆ. (நிலை) எண். 169, சமூக நலம் (ம) சத்துணவுத்திட்டத்துறை, நாள் : 30.12.2009). இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட சமூக நல அலுவலர் தான் குழந்தைத்திருமணம் தடுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதால் அத்தகு குழந்தைத் திருமணத்தை தடுக்கும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. ஒரே சமயத்தில் அநேக குழந்தைத் திருமணங்கள் நடக்கும் பட்சத்தில் மாவட்ட நீதிபதி/மாவட்ட ஆட்சியர் அக்குழந்தை திருமணங்கள் தடுப்பு அலுவலர் ஆவார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல் துறை (குழந்தைகள் நல அலுவலர், சிறப்பு சிறார் காவல் அலகு) குழந்தை நல குழுமம் (தலைவர், உறுப்பினர்கள்), சைல்டு லைன் (1098) வட்டாட்சியர் (தாசில்தார் ) அனைவரும் மாவட்ட குழந்தைத் திருமணம் தடுப்பு அலுவலருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் குழந்தையை மீட்டு மறுவாழ்விற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க முடியும்.

குழந்தைத்திருமணம் தடுப்பு சட்டம் 2006ன்படி குழந்தைத்திருமணம் என்பது குற்றம். மாவட்ட நீதிமன்றம் குழந்தைத்திருமணத்தை தடுத்து நிறுத்த ஆணை வழங்கும் (பிரிவு - 13) குழந்தைத்திருமணம் பிணை ஆணை வழங்கா குற்றம் ஆகும் (பிரிவு - 15) குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை (அல்லது) 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி . சிவகாந்தி, பாதுகாப்பு அலுவலர்கள் திரு.சித்தார்த்தன், திரு.சரவணா, நன்னடத்தை அலுவலர் திருமதி. சௌதாமணி, குழந்தை நலக்குழு தலைவர் சரவணன் மற்றும் உறுப்பினர்கள் திரு.ரவி, திருமதி.உமாமகேஸ்வரி, வள்ளலார் இல்ல இயக்குநர் திரு.கண்ணன் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment