சூளகிரி அருகே 100 வயதை கடந்தும் உழைத்து வாழும் தம்பதிகள்
கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவை மூதாட்டி. இக்கூற்றை விட மேலும் இளமையில் வறுமையும், முதுமையில் தனிமையும் கொடிது கொடிது என்பதே இக்காலத்திற்கானதாக இருக்க முடியும்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியை சேர்ந்தவர் பெரியண்ணன்(106), இவரது இரண்டாவது மனைவி வெங்கடம்மா(100) இந்த தம்பதிகளுக்கு ஒருமகன், இரண்டு மகள்கள் இருந்தநிலையில் மூன்று பிள்ளைகளும் இறந்துவிட பேரன் பேத்திகள் முதியவர்கள் என ஒதுக்கி விட்டதாக சொல்லப்படுகிறது..
இந்த தம்பதிகளின் உடன் பிறந்தோர் யாரும் இப்பொழுது உயிருடன் இல்லை என்பதால் உயிர்வாழ பிறரின் உதவியை நாட விரும்பாமல் தள்ளாத வயதிலும் உழைத்தே பிழைத்து வருகின்றனர்.. இல்லை இல்லை உயிர்வாழ்ந்து வருகின்றனர். புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள ஓட்டு வீட்டில் தங்கியிருந்து.. சுண்ணாம்பை வேக வைத்து பொடியாக்கி விற்பனை செய்து அதில் வரும் சொற்ப பணத்தில் காலத்தை ஓட்டுகின்றனர்..
முதியவர் பெரியண்ணனிடம் பேசுகையில்: சூளகிரியில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள ஆற்றங்கரையில் சுண்ணாம்பு போன்ற கற்களை மூட்டைகளில் பொறுக்கி கொண்டு அவர், தங்கி உள்ள இடத்திலிருந்து ஆபத்தான தேசிய நெடுஞ்சாலையை கடந்து வனபகுதி ஒட்டிய பாறைகளுக்கு நடுவே சூளை அமைத்து சுண்ணாம்பு கற்களை வேகவைத்து பொடியாக்கி சனிக்கிழமை முதல் வியான்கிழமை வரை அதனை தயார்படுத்தி வெள்ளிக்கிழமையன்று சூளகிரி வாரசந்தையில் விற்று வரக்கூடிய பணம் தான் வருமானம் என்கின்றார்.. ஒரு வாரம் முழுவதும் உழைத்தாலும் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை மட்டுமே வருமானம் என்கின்றனர்...
தள்ளாத வயதிலும் பேரப்பிள்ளைகள் கைவிட்டு உடன்பிறப்புக்கள், உறவினர்கள் இன்றி முதுமையில் தனியாக தவிக்கும் இவர்களுக்கு முதியோர்களுக்கு மாத உதவிதொகை வழங்கி மீதமுள்ள காலத்தை கழிக்க அரசு உதவிட வேண்டுமென்பதே தம்பதிகளின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment