"மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம்; மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு நன்றி. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 9, 2021

"மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம்; மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு நன்றி.

‘அனைவருக்கும் நலவாழ்வு” என்ற உயரிய நோக்கதுடன் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

தொடர்ந்து பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறை சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக் கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய ‘மக்களைத் தேடி மருத்துவம்” என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்கள். அதன்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 5.8.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில் பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல் இயன்முறை சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக் கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவ சேவைகள் அளிக்கப்படும் திட்டமான மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை தொடங்கி வைத்தார். 

இத்திட்டத்தின் கீழ் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்படும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள் இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல் அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

மேலும் சமுதாய நலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்தப்படுகிறார்கள். சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 1520 நபர்களுக்கு தொற்றா நோய் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு நாளைக்கு 60 நோயாளிகளுக்கு சுழற்ச்சி முறையில் அவர்களின் இல்லத்திற்கே சென்று மருத்துவ பரிசோதனை செய்து இரத்த அழுத்தம், சக்கரை நோய்க்கு மாத்திரைகளும் ஆதரவு சிகிச்சை தேவைப்படுவோருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் வழங்கப்படுகிறது. 

இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள் இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர் ஆகியோர் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பொது சுகாதார துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவார்கள். 

தமிழகம் முழுவதும் 50 ஒன்றியங்களில் இத்திட்டத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் பயனாளிகளின் சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர். மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயானாளிகள்.

1. சூளகிரி ஊராட்சி ஒன்றியம் அஞ்சாலம் ஊராட்சியை சேர்ந்த திருமதி. இலட்சுமம்மா, க/பெ.லேட் சின்ன பாப்பையா, வயது 80, அவர்கள் தெரிவித்ததாவது: நான் கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறேன். எனக்கு கடந்த பத்து ஆண்டுகளாக இரத்த அழுத்தம் மற்றும் சக்கரை நோய் உள்ளது. நான் இதுவரை 15 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சூளகிரி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். குறிப்பாக எனக்கு கால் வலி அதிகம் உள்ள நிலையில் நடக்க முடியாத சூழ்நிலையில் மிகவும் சிரமபட்டு பேருந்தில் சென்று சிகிச்சை பெற்று வந்தேன். 

இப்பொழுது தமிழக முதல்வர் அவர்கள் எங்கள் ஊருக்கு அருகில் நேரடியாக வந்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இதனால் என்னை போன்ற வயதானவர்களுக்கு செவிலியர்கள் எங்களின் வீட்டிற்கே வந்து சிகிச்சை அளித்து எனக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான மருந்து மாத்திரை வழங்கினார்கள். இதற்காக தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன். 

2. சூளகிரி ஊராட்சி ஒன்றியம், அஞ்சாலம் ஊராட்சியை சேர்ந்த திருமதி. மாதம்மா, க/பெ.சின்னசாமி, வயது 55, அவர்கள் தெரிவித்ததாவது: நான் கணவர் மற்றும் என் மகனுடன் வசித்து கூலி வேலை செய்கிறேன். எனக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக இரத்த அழுத்தம் நோய் உள்ளது. நான் இதுவரை 15 கிலோ மீட்டர் தொலைவு உள்ள சூளகிரி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். குறிப்பாக எனக்கு தலை சுற்றல் ஏற்பட்டு நடக்க முடியாத சூழ்நிலையில் மிகவும் சிரமபட்டு பேருந்தில் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுவேன். 

இப்பொழுது தமிழக முதல்வர் அவர்கள் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சாமனபள்ளிக்கு நேரடியாக வந்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செவிலியர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து இரத்த அழுத்தம் பரிசோதனை செய்து எனக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான மருந்து மாத்திரை வழங்கினார்கள், மேலும் உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சி போன்ற நோய் கட்டுப்பாடு குறித்து அறிவுறுத்தினார்கள். இதற்காக தமிழக முதலவர்  ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை என் சார்பிலும் எனது குடும்பத்தினர் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

3. சூளகிரி ஊராட்சி ஒன்றியம், அஞ்சாலம் ஊராட்சியை சேர்ந்த திரு.மாதப்பன், த/பெ. ராஜப்பா, வயது 48, அவர்கள் தெரிவித்ததாவது: நான் மேற்படி விலாசத்தில் என் மனைவி மற்றும் என் 3 மகள்களுடன் வசித்து விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு கடந்த 7 வருடமாக சர்க்கரை நோய் உள்ளது. நான் சூளகிரி அரசு மருத்துவமனைக்கு இரண்டு சக்கர வாகனம் மூலம் சென்று சிகிச்சை பெற்று வந்தேன். 

தமிழக முதல்வர் அவர்கள் எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள சாமனபள்ளிக்கு நேரடியாக வந்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். எங்களின் வீட்டிற்கே வந்து சிகிச்சை அளிக்க செவிலியர்கள், சுகாதார தன்னார்வளர்கள், உடலின் சக்கரை அளவை பரிசோதனை செய்து எனக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான மருந்து மாத்திரை வழங்கினார்கள். இதனால் எனக்கு போக்குவரத்து செலவு குறைகிறது. இந்த திட்டத்தை வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

4. சூளகிரி ஊராட்சி ஒன்றியம், பெரியசப்படி ஊராட்சியை சேர்ந்த திருமதி வெண்ணிலா, க/பெ. மஞ்சுநாத், வயது 26, அவர்கள் தெரிவித்ததாவது: நான் மேற்படி விலாசத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட என் கணவர் மஞ்சுநாத் உடன் வசித்து வருகிறேன். பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து உள்ளேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவருக்கு விபத்து மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். அவருக்கு மருத்துவர்களை அழைத்து வந்து அடிக்கடி பிசியோதெரப்பி சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். மிகவும் சிரமமான நிலையில் பணம் செலவு செய்து சிகிச்சை பெற்று வந்தார். 

தமிழக முதல்வர் அவர்கள் எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள சாமனபள்ளிக்கு நேரடியாக வந்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இயன்முறை சிகிச்சை வாகனம் மூலம் பிசியோதெரப்பி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். இதனால் என் கணவருக்கு அடிக்கடி பிசியோதெரப்பி செய்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

No comments:

Post a Comment