தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு நினைவாலயம் கட்டப்பட்டு பாரதமாதாவின் வெண்கல சிலை திறக்கப்பட்டது.
பாரதமாதாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் கனவு, லட்சியம். அதற்காகவே தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். அதற்காக பாப்பாரப்பட்டியில் ஆறரை ஏக்கர் நிலம் வாங்கி, அந்த இடத்துக்கு ‘பாரதபுரம்’ என்று பெயரிட்ட அவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வழிகாட்டியான தேசபந்து சித்ரஞ்சன் தாஸை அழைத்துவந்து 1923ல் அடிக்கல் நாட்டினார்.
அதன்பிறகு, சுதந்திர போராட்டங்களுக்காக சிறை சென்ற போது தொழுநோயால் பஸ், ரயில்களில் பயணிக்க ஆங்கிலேய அரசு தடை விதித்தபோது, தனக்குள்ள நோயையும் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் ஊர், ஊராக நடந்தே சென்று, சொற்பொழிவாற்றி பாரதமாதா கோயிலுக்கு நிதி திரட்டினார்.
ஆனால், கோயில் கட்டப்படாமலேயே அவர் வாழ்க்கை அடுத்த 2 ஆண்டுகளில் முடிந்துபோனது. அன்றிலிருந்து பாரதமாதாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று கோரி பல போராட்டங்கள் நடந்தன. அரசியல் காரணங்களால் நாடு சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளை கடந்தும் பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு கோயில் கட்டும் பணி தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பாப்பாரப்பட்டியில் தமிழக அரசு கடந்த 2018 ம் ஆண்டு ரூபாய் 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் நூலகத்துடன் இந்த ஆலயம் அமைக்கபடும் என்றும், ஆலயத்தில் பாரதமாதாவிற்கு 3.25 அடி உயரத்தில் வெங்கல சிலையும் அமைக்கபடும் என அறிவித்து சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவகம் அருகே பாரத மாதா நினைவாலயத்தை கட்டி முடிக்கப்பட்டது.
பாரத மாதா நினைவாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் கலந்துகொண்டு பாரதமாதா சிலை மற்றும் நூலகத்தை திறந்து வைத்து சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் செய்தி துறை இயக்குனர் ஜெயசீலன், தருமபுரி மாவட்ட சார் ஆட்சியர், திட்ட இயக்குனர், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தருமபுரி திமுக மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, மற்றும் இன்பசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment