நிலக்கடலையில் அதிக மகசூல் பெற ஜிப்சம் இட வேண்டும் என வேளாண் அதிகாரி தகவல். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, August 18, 2021

நிலக்கடலையில் அதிக மகசூல் பெற ஜிப்சம் இட வேண்டும் என வேளாண் அதிகாரி தகவல்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி.சித்ரா அவர்கள் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஜிப்சம் இட்டு அதிக மகசூல் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் பாலக்கோடு வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பூக்கும் தருணத்தில் ஜிப்சம் இட்டு அதிக மகசூல் பெறலாம்.

ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் வீதம், 80 கிலோ ஜிப்சத்தை அடியுரமாகவும், 80 கிலோ ஜிப்சத்தை விதைத்த 45 ஆவது நாளிலும் (பூக்கும் பருவம்) இட்டு மண் அணைக்க வேண்டும். 45 வது நாளில் மேலுரமாக ஜிப்சத்தை இடும்போது நிலக்கடலை பயிரின் வேர்ப்பகுதி மற்றும் காய் உருவாகும் பகுதியின் அருகில் சேர்த்து மண் அணைக்க வேண்டும். ஜிப்சம் இடுவதால் மண்ணின் இறுக்கம் குறைந்து மண் இலகுவாக மாறும். இதனால் அதிக எண்ணிக்கையில் விழுதுகள் இறங்கி மிகுதியாக காய்கள் பெற உதவுவதுடன், பிஞ்சு மற்றும் பொக்குக்காய்கள் இல்லாமலும், காய்களின் பருமன் ஒரே சீராகவும், திரட்சியாகவும் விளைச்சலைப் பெருக்கி மகசூலை அதிகரிக்கும்.

ஜிப்சத்தில் உள்ள சுண்ணாம்புச்சத்து (23%) காய்கள் திரட்சியாக உருவாகவும், கந்தகச்சத்து (18%) நிலக்கடலை பருப்பில் எண்ணெய் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது. பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட குறைவாக ஜிப்சம் இடும் பட்சத்தில் மகசூல் குறையும். எனவே பரிந்துரைக்கப்பட்ட அளவான ஒரு ஏக்கருக்கு 160 கிலோ உன்ற அளவில் ஜிப்சம் இட வேண்டும். மண் ஈரமாக இருக்கும்போது ஜிப்சம் இடுவதால் சுண்ணாம்பு மற்றும் கந்தக சத்துகள் போதுமான அளவில் நிலக்கடலைக்கு கிடைக்கும். மேலும் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வேளாண்மை பல்கலை கழகத்தின் நிலக்கடலை ரிச் (GROUNDNUT RICH) 200 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 35 ஆவது நாள் (பூக்கும் பருவம்) மற்றும் 45 ஆவது நாள் (காய்க்கும் பருவத்தில்) இலை வழி மூலம் தெளிக்க வேண்டும். அதனால் மகசூலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment