இந்தியாவில் முதல் முறையாக மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டம் மற்றும் ஒரு லட்சத்து 5 ஆயிரம் தொழிலாளர்கள் ஒரே சமயத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முகாமை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓசூரில் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் இணை நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் தமிழக அரசு பொது மக்களுக்கு ஏற்படும் இந்த நோயினை கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சாமணபள்ளி கிராமத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் மூன்று பரிசோதனை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனத்தில் மருத்துவர், செவிலியர், ஆய்வக உதவியாளர் தலா ஒருவர் இருப்பார். இவர்கள் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு பரிசோதனை செய்து மாத்திரைகளை வழங்குவார்கள். இதன் படி முதல்வர் வீடு வீடாக சென்று மாத்திரைகளை வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் 258 கோடி ரூபாய் செலவில், 30 லட்சம் குடும்பங்களை சேர்ந்த ஒரு கோடி பேர் பயன் பெற உள்ளனர்.
இதேப் போல் சேலம், கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், மற்றும் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை காணொளி மூலமாக தொடங்கி வைத்தார்.
இதேப் போல் கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள் காமாலை விரைவு பரிசோதனை மையத்தை தொடங்கி வைத்தார். இந்த விரைவு பரிசோதனை மூலமாக மாநிலம் முழுவதும் உள்ள 10 லட்சம் கர்ப்பிணிகள் பயன்பெற உள்ளனர். இதேப் போல் மற்றொரு திட்டத்தை காணொளி மூலமாக தொடங்கி வைத்தார்.
ஓசூரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் நிறைந்த உள்ள நிலையில், தன்னிறைவு திட்டத்தின் கீழ், ஒரு லட்சத்து 5 ஆயிரம் தொழிலாளர்கள் ஒரே சமயத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இதற்கான முகாமை காணொளி காட்சி மூலமாக சாமனபள்ளி கிராமத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இந்தியா அளவில் ஒரே சமயத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் கொரோனோ தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பது இது முதல் முறை என்பது குறிப்பிட தக்கது. தனியார் மருத்துவமனைகளில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் இலவசமாக இனி தடுப்பூசி வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சி மாநில அமைச்சர்கள் சுப்ரமணியன், காந்தி, மற்றும் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment