தமிழ் ஆர்வலர்களுக்கான பல்வேறு விருதுகள்; விண்ணப்பிக்க அழைப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, August 18, 2021

தமிழ் ஆர்வலர்களுக்கான பல்வேறு விருதுகள்; விண்ணப்பிக்க அழைப்பு.


தேவநேயப்பாவாணர், வீரமாமுனிவர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

கடைசி நாள்: 31.08.2021

தமிழறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளைத் தொடர்ந்து ழங்கி வருகின்றது. அந்தவகையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் தேவநேயப் பாவாணர், வீரமாமுனிவர் ஆகிய தமிழ்ச்சான்றோர் பெயர்களில் விருதுகள் வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தமிழ் வேர்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல் மற்றும் தனித்தமிழைப் போற்றுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் அகராதியியல் துறையில் சிறந்து விளங்கும் தகுதி வாய்ந்த உள்நாட்டு அகராதியியல் அறிஞர் ஒருவருக்குத் "தேவநேயப் பாவாணர் விருது' வழங்கப்படவுள்ளது.

வீரமாமுனிவர் நெறியில் அவர்தம் படைப்பு நடையில் சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் உருவாக்கியும், தமிழ் அகராதித்துறையில் சிறந்து விளங்கியும் தமிழ் அகராதிகளையும் வெளியிட்டுள்ள, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத, பிறப்பால் வெளிநாட்டைச் சார்ந்த தகுதி வாய்ந்த ஒருவருக்கு "வீரமாமுனிவர் விருது" வழங்கப்படவுள்ளது. இவ்விரு விருதுகளும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வாயிலாக வழங்கப்படும். தகுதிவாய்ந்த அகராதியியல் அறிஞர்கள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சொற்குவை.காம் (www.sorkuvai.com) வலைத்தளத்திலுள்ள அந்தந்த விருதுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பி 31/08/2021க்குள் இவ்வியக்ககத்திற்குக் கிடைக்குமாறு அனுப்பவேண்டும். "இயக்குநர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலகக் கட்டடம், முதல்தளம் எண் 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம். ஆர்.சி.நகர், சென்னை-600028" என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பத்துடன் தங்கள் நாட்டைச் சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், அகராதியியல் வல்லுநர் ஒருவர் என இருவரின் பரிந்துரைச் சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். பரிந்துரைப்பவர்களின் தன்விவரக் குறிப்பினையும் ஒளிப்படத்துடன் (Photo) இணைத்தனுப்ப வேண்டும். விருதுகளுக்காகத் தெரிவு செய்யப்படும் அறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக உரூபா ஓர் இலக்கமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும்.

அகரமுதலி இயக்ககத்தின் தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

கடைசி நாள் ஆகத்து 31, 2021

நடைமுறையில் மக்களிடம் பேச்சு வழக்கிலும், அனைத்து இடங்களிலும் பிறமொழிக் கலப்பில்லாமல் எங்கும் எதிலும் தூயதமிழைப் பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வழியாகப் பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் உலகம் முழுவதிலிருந்தும் 3 தூயதமிழ்ப் பற்றாளர்களைத் தெரிவு செய்து அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா உரூபா 5000/- ( உரூபா ஐந்தாயிரம் மட்டும்) பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

பரிசுத் தொகையைப் பெறுவதற்கு விருப்பமுள்ள தூயதமிழ்ப் பற்றாளர்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தைச் சொற்குவை.காம் (www.sorkuvai.com) என்ற வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்து patralarparisu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது அஞ்சல் வழியாகவோ "இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல்தளம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம். ஆர்.சி. நகர், சென்னை - 600028" என்ற முகவரிக்கு 31.08.2021 ஆம் நாள் மாலை 5.00 மணிக்குள் கிடைப்பதுபோல் அனுப்பி வைக்கவேண்டும்.

மேலும், விண்ணப்பிப்பவரின் தூயதமிழ்ப்பற்றை உறுதிசெய்து வழங்கும் நற்சான்றிதழ்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். அத்துடன் நற்சான்று அளிக்கும் தமிழறிஞர்களின் ஒரு பக்க அளவிலான வாழ்க்கைக் குறிப்புகளையும் (Bio-data) இணைத்து அனுப்பிவைக்க வேண்டும். இப்போட்டியில் கலந்துகொள்வதற்கு அகவை வரம்போ, கல்வித்தகுதியோ கிடையாது. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பு: உரிய சான்றுகளுடன் முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். செய்தி வெளியீடு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், சென்னை-600028. 044-29520509.

அகரமுதலி இயக்ககத்தின் 'தூயதமிழ்ப் பற்றாளர் விருது!" விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

கடைசி நாள்: ஆகத்து 31, 2021

நடைமுறை வாழ்க்கையிலும் தூயதமிழையே பயன்படுத்தும் தனித்தமிழ்ப் பற்றாளர்கள் மூவர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் உரூபா 5,000/- (உரூபா ஐந்தாயிரம் மட்டும்) பரிசுத் தொகை 'தமிழ் அகராதியியல் நாள் விழாவில் 2019-2020ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்மொழிக் காப்பிற்கான ஆக்கத் திட்டம் என்பதால் தமிழறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, பரிசு பெறுவோரின் எண்ணிக்கையையும், பரிசுத் தொகையையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்னும் தமிழறிஞர்கள், தமிழார்வலர்களின் கோரிக்கையினை ஏற்று, 'தூயதமிழ்ப் பற்றாளர்' விருதினைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இயல்பாகவே தூயதமிழைப் பயன்படுத்துகிற தகுதி வாய்ந்தவர்களிலிருந்து மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தெரிவுசெய்து அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் அகராதியியல் நாள் விழா விழாவின்போது, ஒவ்வொருவருக்கும் உரூபா 20,000/- (உரூபா இருபதாயிரம் மட்டும்) எனப் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளன. விருதினை பெறுவதற்கு விருப்பமுள்ள, தகுதி வாய்ந்த தூயதமிழ்ப் பற்றாளர்கள் சொற்குவை.காம் (sorkuvai.com) என்ற வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நிரப்பி, patralarvirudhu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ (அ) இயக்கக முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ 31.08.2021 மாலை 5.00 மணிக்குள் கிடைப்பது போல் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் விண்ணப்பிப்போர் தங்கள் பகுதியில் உள்ள அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோரில் யாரேனும் இருவரிடம் தங்களது தூயதமிழ்ப்பற்றை உறுதி செய்யும் வகையில் நற்சான்றிதழ்களையும் பெற்று இணைத்து அனுப்ப வேண்டும். அத்துடன் நற்சான்று அளிப்போரின் ஒரு பக்க அளவிலான வாழ்க்கைக்குறிப்புகளையும் (Bio-data) சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும். இயக்கக முகவரி : இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை 600028. குறிப்பு : உரிய சான்றுகளுடன் முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

அகரமுதலி இயக்ககத்தின் நற்றமிழ்ப் பாவலர் விருது!

விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகத்து 31, 2021

தூயதமிழ்ச் சொற்களால் கவிதை புனையும் படைப்பாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு 'நற்றமிழ்ப் பாவலர் விருது அறிவித்துள்ளது. மரபுக்கவிதை, புதுக்கவிதைகளில் மொழிக் கலப்பில்லாத நல்ல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தினால் அச்சொற்களின் வீச்சு மக்களிடமும், எதிர்காலத் தலைமுறையினரிடமும் எளிதாகச் சென்றடையும். எனவே, பிறமொழிக் கலப்பில்லாத தூயதமிழ்ச் சொற்களையும், காலத்திற்கேற்ற புதிய தமிழ்க் கலைச்சொற்களையும் பயன்படுத்தி, கவிதைப் படைப்புகளை உருவாக்குவோரின் மொழிப்பற்றுக்கும், படைப்பாற்றலுக்கும் ஊக்கமளிக்கவும், இளம் தலைமுறையினரை மொழிக் கலப்பில்லாத படைப்பாற்றலை நோக்கி ஈர்க்கவும், தங்களது கவிதைப் படைப்புகளில் (மரபுக்கவிதை, புதுக்கவிதை ) பிறமொழிக் கலப்பின்றித் தூயதமிழ்ச் சொற்களையும் புதிய தமிழ்க் கலைச்சொற்களையும் பயன்படுத்தும் பாவலர்கள் இருவரைத் தேர்ந்தெடுத்து, 'தமிழ் அகராதியியல் நாள் விழா'வின்போது தங்கப்பதக்கம் மற்றும் 'நற்றமிழ்ப் பாவலர் விருது வழங்கி, விருதுத் தொகையாக தலா 50,000/- உரூபாவும் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தைச் சொற்குவை.காம் (sorkuvai.com) என்ற வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்து paavalarvirudu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ (அ) அஞ்சல் வழியாகவோ "இயக்குநர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை 600028" என்ற முகவரிக்கு 31.08.2021 மாலை 5.00 மணிக்குள் கிடைப்பது போல் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், தங்கள் படைப்புகளில் தூயதமிழ் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகளாக, கடைசியாக வெளிவந்த இரண்டு கவிதை நூல்களை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மின்னஞ்சல் வழியாகவோ, ஒளிப்படிகளாகவோ, புலனம் வழியாகவோ அனுப்பி வைக்கப்படும் நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

அகரமுதலி இயக்ககத்தின் "தூயதமிழ் ஊடக விருது!" விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

கடைசி நாள் ஆகத்து 31, 2021

அன்றாடம் மக்களின் வாழ்வியலுக்குத் தேவையான செய்திகளை முன்னறிந்து கொடுக்கும் செம்மாந்த பணிகளைச் சிறப்புடன் செய்துவருகின்ற காட்சி, அச்சு ஊடகங்கள் மொழிக்காப்பிலும் முகாமையான பங்காற்றுகின்றன.

ஊடகமொழியே உலகமொழியாகிவிட்ட இன்றைய நிலையில், காட்சி மற்றும் அச்சு ஊடகங்களின் உதவியோடுதான் நல்ல தமிழ்ச்சொற்களையும் காலத்திற்கேற்ற புதிய தமிழ்க் கலைச்சொற்களையும் புழங்குமொழியாக்க முடியும். மொழிக்கலப்பைத் தவிர்த்தலே தமிழ்மொழியைக் காப்பதற்கும் வளப்படுத்துவதற்குமான அடிப்படையாகும். எனவே, தூயதமிழைப் பயன்படுத்தும் காட்சி ஊடகங்களையும், அச்சு ஊடகங்களையும் பாராட்டி ஊக்கமளிக்கும் வகையில், 'தூய தமிழ் ஊடக விருதினைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தூயதமிழ்ச் சொற்களையும், காலத்திற்கேற்ற புதிய கலைச்சொற்களையும் பயன்படுத்தி மக்களுக்குச் செய்திகளை வழங்கும் ஒரு காட்சி ஊடகத்தையும், ஓர் அச்சு ஊடகத்தையும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத் தேர்வுசெய்து, தமிழ் அகராதியியல் நாள் விழாவின்போது தூய தமிழ் ஊடக விருதும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். விருதுத் தொகையாக ஓர் ஊடகத்திற்கு உரூபா 50,000/- (உரூபா ஐம்பதாயிரம் மட்டும், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரைச் சான்றிதழும் வழங்கப்படும்.

காட்சி ஊடகப் பிரிவில் தொலைக்காட்சி ஊடகங்கள் மட்டுமே ஏற்கப்படும். அச்சு ஊடகப் பிரிவில் அரசு பதிவெண் பெற்று குறைந்தது 10 ஆண்டுகள் இடைநிறுத்தம் இல்லாமல் வெளிவரும் நாளிதழ், வார இதழ், மாத இதழ் ஆகியவை விண்ணப்பிக்கத் தகுதியானவைகளாகும். விருதுபெறத் தகுதி வாய்ந்த, விருப்பமுள்ள ஊடக நிறுவனத்தார் சொற்குவை.காம் (sorkuvai.com) என்ற வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நிரப்பி தங்கள் நிறுவனம் தூயதமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் சான்றுகளை இணைத்து, 31.08.2021-ஆம் நாளுக்குள் oodagavirudu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதுடன், கீழ்க்கண்ட இயக்கக முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ 31.08.2021 மாலை 5.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

இயக்கக முகவரி : இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை 600028.

No comments:

Post a Comment