அரூர் பகுதியில் கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் திட்டத்தில் முறைகேடு கர்ப்பிணி பெண்கள் புகார்.
அரூர் அருகே கீழானூர் கிராம கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் தொகை, பெட்டக பாக்ஸ் வழங்குவதில் முறைகேடு என அப்பகுதி கர்ப்பிணி பெண்கள் சரமாரி புகார்.
தமிழகத்தில் 1989 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தை துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்ணுக்கு நிதி உதவி வழங்கினார். அதையடுத்து 1998 ஆம் ஆண்டில் அந்த திட்டத்திற்கான தொகையை உயர்த்தி ரூ. 500 ஆக வழங்கினார். மீண்டும் 2006-20007 ஆம் ஆண்டில் ரூ. 5,000 ஆக உயர்த்தினார்.
அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் மூலம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவி தொகை ரூ. 12 ஆயிரமாக உயர்த்தினார். தொடர்ந்து .2016 இல் மீண்டும் முதல்வராக பதவியேற்ற பின்பு மகப்பேறு திட்டத்திற்கான தொகையை ரூ. 18000 ஆயிரமாக உயர்த்தி, அதில் 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு இரும்புச் சத்து டானிக், பேரிச்சம் பழம்,புரத சத்து நிறைந்த பிஸ்கட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரைகள் அடங்கிய,ரூ. 2000 மதிப்புள்ள பெட்டக பாக்ஸ் ஒன்றும், பிரசவத்திற்குப் பிறகு குழந்தைக்கு கொசு வலை, சோப்பு, ஷாம்பூ, உள்ளிட்ட பல வகை பொருட்கள் நிரம்பிய ரூ. 2000 மதிப்பிலான கெட்டது கிட் பாக்ஸ் என இரண்டு கிப்ட் பாக்ஸ் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு முதல் குழந்தைக்கு மட்டும் ரூ. 8000 வழங்குகிறது.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியம், செல்லம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கீழானூர் கிராமப்பகுதியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் நிதியுதவி உதவி முறையாக வழங்கவில்லை இது குறித்து செவிலியரிடம் கேட்டால் சரியான பதில் இல்லை என அப்பகுதி கர்ப்பிணி பெண்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி கர்ப்பிணி பெண்களிடம் கேட்டபோது. எங்கள் கிராம கர்ப்பிணி பெண்கள் தீர்த்தமலை அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறோம். அரசு நிதியுதவி பெறுவதற்காக ஆதார் அட்டை, வங்கி விவரம் அந்த மருத்துவமனையில் கொடுத்துள்ளோம்.
அரசு வழங்கும் நிதியுதவி ரூ. 18000 ஆயிரத்தில் இரண்டு பெட்டகம் பாக்ஸ் ரூ. 4000 ஆயிரம் போக மீதி ரூ. 14ஆயிரத்தை கர்ப்பிணிப் பெண்களின் வங்கி கணக்கில் செலுத்துவார்கள். ஆனால் கர்ப்பிணிப் பெண்களின் வங்கிக் கணக்கில் சோதித்துப் பார்க்கும் பொழுது குறைவான தொகை மட்டுமே உள்ளது. 7 மாத கர்ப்பிணிகளுக்கு பெட்டகம் வழங்கப்படுகிறது குழந்தை பிறந்த பிறகு வழங்கப்படும் பெட்டகம் வழங்கப்படுவதில்லை. சிலருக்கு 2 பெட்டக பாக்ஸ் வழங்கவில்லை. குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளாகியும் இன்று வரை முழுமையாக தொகை வந்து சேரவில்லை, ஒரு பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்து இறந்தால் ரூ. 8000 வழங்க வேண்டும் ஆனால் இன்று வரை அந்தப் பெண்ணுக்கு தொகை வழங்கப்படவில்லை, மேலும் அதே பெண் இரண்டு குழந்தைகளை பெற்ற பின்பும் அந்த குழந்தைகளுக்கான உதவித் தொகையும் இன்றுவரை முழுமையாக கிடைக்காமல் உள்ளதாக அடுக்கடுக்காக புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அரூர் வட்டார மருத்துவ அலுவலர் தொல்காப்பியனிடம் கேட்டபோது. ஒரு பெண்ணுக்கு முதல் குழந்தை பிறக்கும் பொழுது மத்திய அரசு வழங்கும் ரூ. 8000 ஆயிரம் பெறுவதற்கு பயனாளிகள் வங்கி கணக்கில் ஆதார் அட்டையில் பிழை இருந்தால் வங்கிக் கணக்கில் தொகை சேர்வதில் சிக்கல் ஏற்படும். இரண்டாவது குழந்தைக்கு தமிழக அரசு மூலம் வழங்கப்படும் முழுத்தொகையும் வங்கி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.அதேபோன்று ஆதார் அட்டையில் பிழை இருந்தால் அது திருத்தி வங்கியில் கொடுத்து தொகை பெற்றுக்கொள்ளலாம். சிலர் மனைவிக்கு தெரியாமல் அவரது கணவர் ஏடிஎம் கார்டு மூலம் அரசு வழங்கும் நிதி எடுத்துக்கொண்டு மனைவியிடம் மறைத்து விடுகிறார். அந்தப் பெண் எங்களிடம் வந்து புகார் தெரிவிக்கும்போது வங்கியின் ஸ்டேட்மெண்ட் எடுத்து வர அனுப்பி வைப்போம் பிறகு அவர்கள் வரமாட்டார்கள். 2019 -20 ஆம் ஆண்டில் பெட்டகங்கள் பற்றாக்குறை இருந்தது தற்போது 2021ல் சீராக பெட்டகங்கள் வந்து கொண்டிருக்கிறது அவை அனைத்தும் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறோம். சிலர் வங்கி கணக்கு சரியாக பராமரிக்காததால் அவர்களது வங்கி கணக்கு வங்கி நிர்வாகம் நிறுத்தி வைக்கப்படலாம்,அரசு வழங்கும் நிதி பயனாளிக்கு சென்றடையவில்லை என எங்களிடம் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment