கெயில் எரிகாற்று குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வலுக்கும் விவசாயிகளின் போராட்டம் - தருமபரி அருகே எரப்பட்டி கிராமத்தில் 7 மாவட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.
எரப்பட்டியில் கெயில் நிறுவனத்தின் எரிகாற்று குழாய்களை இறக்கி வைப்பதை உடனடியாக கைவிடக் கோரியும், இறக்கி வைக்கப்பட்ட எரிகாற்று குழாய்களை தமிழ்நாட்டை விட்டு அப்புறப்படுத்த கோரியும் தமிழக விவசாயிகள் சங்கம்,கெயில் எரிகாற்று குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இயக்கம்,
பாரத் பெட்ரோலியத்தின் IDPL எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இயக்கம்
தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய ஒன்றிய அரசுக்கு சொந்தமான கெயில் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக எரிகாற்று குழாய் திட்டத்தை அமைப்பதற்காக கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து கடும் முயற்சி எடுத்து வருகிறது.
பாதிக்கப்பட்ட 7 மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்த போராடியதன் விளைவாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சாலையோரமாகத்தான் திட்டத்தை அமைக்க வேண்டுமென ஒன்றிய அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதன்பின்பு நிறுத்திவைக்கப்பட்ட திட்டத்தை கடந்த சட்டமன்ற தேர்தல் இடைவெளியில் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மிரட்டி, அச்சுறுத்தி கெயில் நிறுவனம் அமைக்க தொடங்கியது, இதை அறிந்த 7 மாவட்ட விவசாயிகள் கடந்த 15-04-2021 அன்று 400க்கும் மேற்பட்ட உழவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்கள்.
அதன் பின்பு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மறு உத்தரவு வரும் வரை திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களையும், உழவர்கள் சங்கத்தினரும் கலந்து கொள்ளாமல் திட்டப்பணிகள் எந்த விதத்திலும் தொடங்கப்படாது எனவும் உறுதியளித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும், தேர்தல் பரப்புரைகளிலும் கெயில் எரிகாற்று குழாய் திட்டம் சாலை ஓரமாக தான் அமைக்கப்படும் என்று தெளிவுபட உறுதி அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், படியூர் அருகே இதேபோன்று குழாய்களை இறக்கி வைக்கும் முயற்சி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சங்கங்களின் ஒற்றுமையால் தடுத்து நிறுத்தப்பட்டது.
தற்போது தர்மபுரி மாவட்டம், தர்மபுரியிலிருந்து பாப்பாரப்பட்டி செல்லும் வழியில் உள்ள, எரப்பட்டியில் சேமிப்பு கிடங்கில் எரிகாற்று குழாய்களை இறக்கி வைக்கும் பணியை மிகப்பெரிய அளவில் கெயில் நிறுவனம் செய்து வருகிறது,எரப்பட்டியில் கெயில் நிறுவனத்தின் எரிகாற்று குழாய்களை இறக்கி வைப்பதை உடனடியாக கைவிடக் கோரியும், இறக்கி வைக்கப்பட்ட எரிகாற்று குழாய்களை தமிழ்நாட்டை விட்டு அப்புறப்படுத்த கோரியும் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment