காவிரி நீரை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை தருமபுரி மாவட்ட விவசாயிகள் வேதனை. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, August 24, 2021

காவிரி நீரை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை தருமபுரி மாவட்ட விவசாயிகள் வேதனை.

தமிழகத்துக்கு காவிரிநீர் முதலில் வந்தடையும் இடமாக இருந்தாலும், அந்நீரை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ள தருமபுரி மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி உபரி நீர் தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பென்னாகரம் பகுதியில் உள்ள ஒகேனக்கல்லை முதலில் வந்தடைகிறது. பின்பு இங்கு வரக்கூடிய தண்ணீர்  வழிந்தோடி மேட்டூர் அணையை சென்றடைகிறது.  மேட்டூர் அணையிலிருந்து ஈரோடு, திருச்சி, தஞ்சை டெல்டா மாவட்டங்களுக்கு சென்றடைகிறது. இந்த நீரை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. 

காவிரி தமிழகத்தை தொட்டவுடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வருகிறது. ஆனால்,  மாவட்ட விவசாய பரப்புகளுக்கு காவிரி நீரால் எந்த பயனும் இல்லை. அதற்கான கட்டமைப்பும் இல்லை. அதனால் கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் காவிரி தருமபுரி மாவட்டத்துக்கு உட்பட்ட ஒக்கேனக்கல்லில் ஆர்பரித்து ஒடிவரும் நீரை, விவசாயத்துக்கு பயன்படுத்தற்கான வசதியை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. 

தருமபுரி மாவட்டம் முழுமையாகவே விவசாயம் சார்ந்த மாவட்டம்.. பெரும்பாலும் மாவட்டத்தில் உள்ள நிலப்பரப்புகள் அனைத்தும் மேட்டு நிலங்களாக உள்ளன. பாசன நிலங்களின் பரப்பளவு மிக மிகக் குறைவு. தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளில் விவசாய பணியே பிரதானமாக உள்ளது. இங்கு கிணற்று பாசனம் கைவிட்டதால் பருவமழையை நம்பியே விவசாயிகள் உள்ளனர். மழை பெய்தால் ஆண்டுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே விவசாய சாகுபடி நடக்கும் சூழல் உள்ளது. 

மழை பெய்யவில்லை என்றால் ஆண்டு முழுவதுமே வாய்க்கால் வரப்புகளில்_விவசாயி இறங்க வேண்டிய அவசியம் இருக்காது. அதனால் ₹ பணத்தேவைக்காக அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கட்டிட வேலைக்கு செல்லும் அவலநிலை நீடிக்கிறது. 

தருமபுரி மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் கோவை, திருப்பூர், சென்னை போன்ற பகுதிகளில் உள்ள கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீரில் புளோரைடு அதிக அளவு கலந்துள்ள காரணத்தால் சிலபகுதிகளில் கிடைக்கப்பெறும் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.

தற்போது கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. 

ஹாரங்கி அணை:

காவிரியின் துணை ஆறான ஹாரங்கி ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது மாவட்டம் ஹூட்லூர் என்னும் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதி 717 கிலோமீட்டர் ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 8 டிஎம்சி 


ஹேமாவதி அணை:

காவிரியின் குறுக்கே ஹாசன் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் உபரிநீர் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு சென்று சேரும். இந்த அணை கட்டப்பட்ட ஆண்டு 1979. இது 58 அடி உயரமும் 110 அடி அகலமும் 15 ஆயிரத்து 394 அடி நீளமும் கொண்டது. இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி 2210 சதுர கிலோமீட்டர்கள். இந்த அணையின் மொத்த கொள்ளளவு 37 டிஎம்சி ஆகும்.


கிருஷ்ணாராஜ சாகர் அணை:

மைசூரை அடுத்த மாண்டியா மாவட்டத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் பரப்பளவில் இதுவே மிகவும் பெரியது இதை கண்ணம்பாடி அணை என்றும் கூறுவர். 31 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இதன் முழு கொள்ளளவு 49 டிஎம்சி ஆகும்.


கபினி அணை:

காவிரி ஆற்றின் முக்கிய துணை நதியான கபினி ஆற்றின் குறுக்கே மைசூர் மாவட்டத்தில் 1974இல் கட்டப்பட்டது இந்த கபினி அணை. இதன் நீளம் 12,927 சதுர அடி. உயரம் 84 அடி. நீர்ப்பிடிப்புப் பகுதி 2141. 9 சதுர கிலோமீட்டர். இதன் பரப்பளவு 55 ஹெக்டேர். இதன் மொத்த கொள்ளளவு 15 புள்ளி 67 டிஎம்சி.

குடகு மலையிலிருந்து பொங்கி வரும் காவிரி நதியானது கர்நாடகாவில் கட்டப்பட்டுள்ள நான்கு அணைகளை அதனுடைய முழு கொள்ளளவை எட்டிய பின்பே தமிழகத்திற்கு திறந்து விடப்படும் காவிரி நீரானது  கிருஷ்ணகிரி மாவட்டம் பிலிகுண்டுலு எனும் இடத்தில் தமிழகத்திற்குள் தனது முதல் அடியை எடுத்துவைத்து சீறிப்பாயும் காவிரி நதியானது தமிழகத்தின் நயாகரா என்று அழைக்கப்படும் ஒகேனக்கல்லை  கடந்து செல்லும்பொழுது தன்னுடன் பாலாறு நதியையும் இணைத்து மேட்டூர் அணையை அடைகிறது.


மேட்டூர் அணை:

காவிரி ஆற்றின் குறுக்கே       தமிழகத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணை ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் மேட்டூரில் அமைந்துள்ள மேட்டூர் அணையாகும். 1934 இல் கட்டிமுடிக்கப்பட்ட இந்த அணையின் உயரம் 120 அடி. 1700 மீட்டர் நீளம் மற்றும் 171 அடி அகலம் கொண்டது. இதன் மொத்த கொள்ளளவு 93.4 டிஎம்சி ஆகும்.


காவிரி மற்றும் அதன் துணை நதிகளின் குறுக்கே கர்நாடகப் பகுதியில் அமைந்துள்ள நான்கு அணைகளின் முழுமையான கொள்ளளவு 104.5 டிஎம்சி ஆகும்.ஆனால், தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93.4 டிஎம்சி ஆகும். 


மேட்டூர் அணைக்கு மேலே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக எல்லையான பிலிகுண்டுலு அருகே அமைந்துள்ள ராசிமணல் என்ற இடத்தில் 1965-ம் ஆண்டில் காமராஜர் முதல்வராக இருந்தபோது புதிய அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய இடத்தில் இப்பொழுது  அணை கட்டினால் அங்கே 50 டிஎம்சி லிருந்து 100 டிஎம்சி நீரை சேமிக்க இயலும். வறட்சியான காலங்களில் இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த ஏதுவாக இருக்கும். மேட்டூர் அணை நிரம்பினால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஈரோடு, நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூா், நாகை, அரியலுா், கடலூர் என தமிழகத்தின் 10 மாவட்டங்களில் விவசாய பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. 


300 கிலோமீட்டா் தூரம் பயணித்து நிலங்களை செம்மையாக்கும் காவிரி நீா் 45 கிலோமீட்டா் தொலைவில் உள்ள தருமபுரி மக்களுக்கு பயனை அளிக்கவில்லை என்பதுதான் மிகவும் வேதனையாக உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் நுழைந்து ஓடும் காவிரி நீரை மின்மோட்டார்கள் அமைத்து குழாய்கள் மூலம் பென்னாகரத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பலாம். பின் அங்கு இருந்து மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லலாம். இவ்வாறு செய்தால் அங்குள்ள  விவசாயிகள் மூன்று போகம் விவசாயம் செய்ய முடியும்.


இதன் காரணமாக விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரும். மாநிலங்களுக்கு மற்றும் வெளிமாவட்டங்களுக்கு வேலை தேடும் அவலநிலை ஏற்படாது. இங்குள்ள இளைஞர்களுக்கும் விவசாய கூலிகளுக்கு ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு கிடைக்கும். காவிரியில் தண்ணீர் அதிகளவு வரும் காலங்களில் தண்ணீரை ஒகேனக்கல்லில் இருந்து குழாய்கள் மூலம் கொண்டுவந்து ஏரிகளை நிரப்ப புதிய நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்தி விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். கானல் நீரான காவிரி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட விவசாயிகளிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment