தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியங்களின் மூலம் 3624 தொழிலாளிகளுக்கு ரூ.88.55 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இஆப, அவர்கள் 54 பயனாளிகளுக்கு நேற்று வழங்கி துவக்கி வைத்தார்கள்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியங்களின் மூலம் தொழிலாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (06.08.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தலைமையேற்று அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது.
அமைப்புசாரா தொழிலாளர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக கடந்த 01.11.2008 முதல் மாவட்டங்கள் தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும், அமைப்புசாரா தொழிலாளர்கள் எளிய முறையில் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஏதுவாக கடந்த 15.09.2009 முதல் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னனி மாநிலமாக திகழ்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற 50 நாட்களில் 50,000 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என்ற இலக்கினை அடைந்திட உத்தரவிட்டதன் அடிப்படையில், அந்த இலக்கு எய்தப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை, ராயப்பேட்டையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும்இதர 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற 50,000 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் 17 நலவாரியங்களில் மொத்தம் 2,05,551 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், மொத்தம் 10,428 தொழிலாளர்கருக்கு மாதம் ரூ.1,000/- ஓய்வூதிய உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இத்துறையின் மூலம் கல்வி, திருமணம், ஓய்வூதியம், கண் கண்ணாடி, விபத்து ஊனம், இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம், மகப்பேறு நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களின் மூலம் கல்வி உதவித் தொகையாக, ரூ.1,000/- முதல் ரூ. 8,000/- வரை (இரண்டு குழந்தைகளுக்கு), திருமணம் உதவித் தொகையாக ரூ.3,000/- முதல் ரூ. 5,000/- வரை (இரண்டு குழந்தைகளுக்கு), பதிவு செய்த தொழிலாளிக்கு ரூ.500/- கண் கண்ணாடிக்கு உதவித் தொகையாகவும், மகப்பேறு உதவித்தொகையாக, ரூ.6000/- (இரண்டு குழந்தைகளுக்கு)-மும், ஓய்வூதியமாக ரூ.1,000/- மாதந்தோறும் இயற்கை மரண உதவித்தொகையாக ரூ.25,000/- நியமனதாரருக்கும், விபத்து மரணம் உதவித்தொகையாக ரூ.1,02,000/- நியமனதாரருக்கும், பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத தொழிலாளிகளுக்கு பணியிடத்து விபத்து மரணம் உதவித்தொகையாக ரூ.5,00,000/-மும் வழங்கப்படுகின்றது.
இதுவரை தருமபுரி மாவட்டத்தில் நலவாரியங்களில் பதிவு செய்து, பணியிடத்தில் மரணம் அடைந்த 10 தொழிலாளிகளின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5,00,000/-வீதம் மொத்தம் ரூ.50,00,000/ உதவிதொகையாக பெற்று வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியங்களின் மூலம் 2650 பயனாளிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000/- வீதம் ரூ.26,50,000 ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணைகளும், நோயினால் இயற்கை மரணமடைந்த 93 தொழிலாளிகளின் நியமனதாரர்களுக்கு தலா ரூ.25000/- வீதம் ரூ.23,25,000 இயற்கை மரண உதவித்தொகையும், தொழிலாளர்களின் குழந்தைகள் 10-ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படிப்பதற்கான 880 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.38,79,7000 கல்வி உதவித்தொகையும் மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.500/- கண்கண்ணாடி உதவித் தொகையும் என மொத்தம் 3624 தொழிலாளர்களுக்கு பல்வேறு நலவாரியங்கள் மூலம் ரூ.88,55,200/- பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விதமாக இன்றைய தினம் 54 பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து பயனாளிகளுக்கும் உடனடியாக வழங்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்ற அனைத்து நிறுவனங்களும் தங்கள் பணி மேற்கொள்ளும் இடத்தில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படவதை தவிர்க்கலாம். தொழிலாளர்களும் தங்கள் பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிட வலியுறுத்த வேண்டும். நலத்திட்ட உதவிகள் பெறும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (தொழிலாளர்) திருமதி.கே.பி.இந்தியா, தமிழ்நாடு அரசு கட்டுமான நலவாரிய உறுப்பினர் திரு. ஜெ.பழனி உட்பட தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment